மன்னாரில் கொரோனா தொற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மன்னார் நகர் பகுதிகளான பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய இரு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கபட்டுள்ளன.
கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த. வினோதனும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில் மன்னார் பட்டித்தோட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டட வேலைக்காக, வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்த கட்டட தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்றுநோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரோடு நேரடியாக தொடர்பு கொண்டதாக தெரிவிக்கபடும் 42 பேர் முதற்கட்டமாக PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
இதன் பிரகாரம் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளதாக அறிக்கைகள் வெளியிடபட்டுள்ளன.