அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை விஜயம் தொடர்பாக எதிக்கட்சியினர் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக ஜே.வி.பி கட்சியினரும் ஐக்கியமக்கள் சக்தி கட்சியினரும் அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்ளவுள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் “நாட்டின் இறைமையை பாதிக்கக்கூடிய வகையிலான வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படமாட்டாது” என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதியாக தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.
அதில் கருத்து தெரிவித்த அவர் , இலங்கையிடமிருந்து அதிகளவு பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளும் நாடாக அமெரிக்கா தொடர்ந்தும் திகழ்கின்றது. இதனால் நாட்டுக்கு நன்மை அளிக்கக்கூடிய உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், நாட்டின் இறைமையை பாதிக்கும் எவ்வித உடன்படிக்கை குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.