கொவிட்-19 வைரஸ் இலங்கையில் சமூகப் பரவலடைந்துள்ளதாக நிபுணர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்ததுள்ளார்.
முழு நாட்டையும் முடக்கி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு அரசாங்கம் தயாராகவில்லை. அதேபோன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கும் எதிர்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்களுக்கும் பொருளாதார சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமெனவும் அவர் கூறினார்.
அத்துடன், நாட்டில் நிரம்பல் ஏற்பட்டுள்ள மீன் வகைகளை கொள்வனவு செய்து டின் மீன் உற்பத்திகளை அதிகரிக்க உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரமேஸ் பத்திரன இவ்வாறு கூறினார். ஊடகச்சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில்களையும் வழங்கியுள்ளார்.