ஹர்த்தாலால் முடங்கிப்போன தமிழர் பகுதிகள் !

யாழ் பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக தமிழர் வாழ் பகுதிகள் பலவும் இன்றையதினம் ஹர்த்தால் காரணமாக முடங்கிப்போயுள்ளது. மக்கள் அனைவரும் இன்றைய ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளதையும் காணமுடிகின்றது.

இன்றைய போராட்டத்திற்கும் யாழ்ப்பாண மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.அரச பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.அத்தோடு பாடசாலையின் கல்வி செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுகிளிநொச்சியும்முடங்கியுள்ளது. கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன, அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்தன.வவுனியா நகரில் சில வியாபார நிலையங்கள் கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் ஏனைய வியாபார நிலையங்கள் பொதுச்சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. நகரை அண்டிய பகுதிகளான பூந்தோட்டம், குருமன்காடு, கோவில்குளம் போன்ற இடங்களில் அனைத்து வியாபார நிலையங்களும் முழுமையாக மூடப்பட்டிருந்தது.

 

வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம்”- நாளைய கர்த்தாலுக்கு யாழ்.முஸ்லிம் இளைஞர் கழகம் முழுமையான ஆதரவு !

“வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம்” என யாழ் முஸ்லிம் இளைஞர் கழக தலைவர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அவர் ​மேலும் தெரிவிக்கையில்,

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமை கண்டனத்திற்குரிய ஒன்றாகும். இச் செயற்பாட்டிற்கு யாழ்.முஸ்லிம் இளைஞர் கழகமாக நாம் எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை அகற்றியமையினால் உறவுகளை இழந்து வாழும் சகோதர உறவுகளின் மனங்களில் எவ்வளவு கவலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாம் அறிவோம். அவ் உறவுகளின் துயரத்தில் ‘மக்கள்’ என்ற நோக்கில் முஸ்லிம் மக்களாகிய நாமும் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகின்றோம்

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் தமிழ் முஸ்லிம் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் இணைந்து வாழ வேண்டும் என்பது நாம் தொடர்ந்து வலியுறுத்திவரும் விடயமாகும். இவ் விடயத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் எவ்வளவு தூரம் எமது முன்னகர்வுகளை எடுத்துவைத்திருக்கின்றோம் என்பது பற்றி நாம் அவசியம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் ‘தமிழ் பேசும் மக்களாக’ ஒன்றித்து வாழ்வதே இரு சமூகங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பாக அமையும் என்பது நாம் நீண்டகாலமாக வலியுறுத்திவரும் உண்மையாகும். இதுவே எம்மை பிற சக்திகளின் சிறுபான்மை (தமிழ் முஸ்லிம்) மக்களுக்கு எதிரான விடயங்களில் இரு தரப்பினரையும் பாதுகாக்கும்.

அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களாக அனைத்து வழிகளிலும் ஒன்றினைய முயற்சிப்போம் என்று இத்தால் பகிரங்க அழைப்பு விடுவதுடன், நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் நாளைய தினம் (11.01.2021) இடம்பெறவுள்ள பூரண கர்த்தால் நடவடிக்கைக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகமாக நாமும் எமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குகின்றோம் என்பதை இத்தால் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

‘வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *