யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப் பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர்களில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மாதிரி வழங்கிய யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபருக்கும் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 486 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டஙகளில் தலா 2 பேரும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 2 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள னர். தெல்லிப்பழை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் மூவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபராவார்.
மேலும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தலா ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும் வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்குச் சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்ட யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
———————-
Reported by : Sisil.L