யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் அமைக்கப்பட்டமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில்நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.
மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வந்தது.
இதையடுத்து கடந்த ஜனவரி 11 ஆம் திகதி அதிகாலை, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.சிறிசற்குணராசா தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரின் அனுமதிக்கு அமைய, அடிக்கல் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களால் நினைவுத் தூபி கட்டுமானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமாக மீள அமைக்கும் பணி நிறைவுக்கு வந்த நிலையில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை 7.30 மணிக்கு யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ். சிறிசற்குணராசாவினால் திறந்து வைக்கப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், துணைவேந்தருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இருந்தபோதிலும் குறித்த நேரத்தில் ஏற்பாடு செய்தவாறு முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L