தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெற வேண்டும் எனப் பேசியதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாட்டை கொழும்பு பிரதம நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல நேற்று வெள்ளிக்கிழமை எடுத்துக்கொண்டார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தாம் இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவில்லை என்றனர். இவ்வழக்கை செப்டெம்பர் 10ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை அறிவுறுத்தினார்.
கடந்த 2018 ஜூலை 2ஆம் திகதி யாழ். வீரசிங்கம்
மண்டபத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Reported by : Sisil.L