யாழ்ப்பாணம் – மிருசுவிலில் சிறுவன் உட்பட அப்பாவி பொது மக்கள் 8 பேரை படுகொலை செய்த கொலையாளியான சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை ஏற்றுக் கொள்ள முடியாத தவறு என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், சுனில் உள்ளிட்ட இராணுவ சிப்பாய்கள் மிருசுவிலில் 8 பேரை கொலைசெய்து, கழுத்தை அறுத்துப் புதைத்தனர். இந்தக் குற்றத்துக்காக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியது தவறு. நீங்கள் எவ்வாறு அத்தகைய செயல்களை அங்கீகரிப்பீர்கள்? எனவும் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பினார்.
கொலைகாரன் கொலைகாரன்தான்.
பிரேமாவதி மன்னம்பேரியைக் கொன்றதும் இராணுவச் சிப்பாயே. அவர் தூக்குமேடைக்கு அனுப்பப்பட்டார். குற்றமிழைத்தவர்களை விடுதலை செய்துவிட்டு இராணுவ வீரர்களை விடுவிக்கின்றோம் என நீங்கள் கொடி தூக்க முடியாது.மரண தண்டனைக் கைதியாக தண்டனை அனுபவித்து வரும் முன்னாள்
எம்.பி. துமிந்த சில்வாவை விடுதலை செய்யவும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஒரு மரண தண்டனைக் கைதியை விடுதலை செய்ய சில பொறிமுறைகள் உள்ளன. இங்கு அவை பின்பற்றப்படவில்லை. ஜனாதிபதி பின் கதவால் தீர்மானங்களை எடுக்கின்றார். மரண தண்டனைக் கைதியை விடுதலை செய்யச் சிறைச்சாலைகள் ஆணையாளர் பரிந்துரை முன்வைக்க வேண்டும். பின்னர் ஓய்வுபெற்ற சட்டமா அதிபர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும். பெரும் குற்றம் செய்தவர் தொடர்பில் ஜனாதிபதிக்கு சமூக பொறுப்பு இருக்க வேண்டும்.
நன்னடத்தை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால்,இவை இங்கு பின்பற்றப்படவில்லை என்றார்.
இதேவேளை, கொலைக் குற்றவாளியான இராணுவ சிப்பாய் ரத்நாயக்கவை விடுவித்தது பிழை என பகிரங்கமாக ஒப்புக்கொண்டு பேசியதற்காக அவரது உரை முடிந்ததும் பாராளுமன்றத்தில் இருந்த தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ. சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் அவரது அருகில் சென்று கைலாகு கொடுத்து பாராட்டினர்.
Reported by : Sisil.L