தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசர நிலையை இராணுவம் அறிவித்துள்ளது. ஆங் சான் சூகி உட்பட முக்கிய அரசியல் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மியான்மர் இராணுவத்தின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தை மியான்மர் இராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.ஆனாலும் மியான்மரில் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. அதேபோல் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதும் தொடர்கிறது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், போராட்டக்காரர்கள் 38 பேர் பலியாகினர்.
இதனிடையே, மியான்மர் ராணுவத்துக்கு சீனா ஆதரவாக இருப்பதாகக் கூறி அந்நாட்டு நிறுவனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இதையடுத்து, வன்முறைகளைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும் என்று மியான்மர் அரசை கேட்டுக் கொண்ட சீனத் தூதரகம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
மேலும் மியான்மரிலுள்ள சீன நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று மியான்மர் இராணுவத்தை சீனா வலியுறுத்தியது. சீன அரசின் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து யாங்கூனின் ஹலிங் தார் யார் மற்றும் ஸ்வேபிதா நகரங்களில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதாக இராணுவம் அறிவித்துள்ளது.