மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தாக்குதல் மிக மோசமாக இருக்கிறது. நேற்று மட்டும் 67 ஆயிரம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 568 பேர் உயிரிழந்துள்ளனர்.
அனைத்து ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன. போதிய ஒட்சிசன் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் தொடர்ந்து பலரும் பலியாகி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக இருக்கிறது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஒட்சிசன் கசிவு ஏற்பட்டு 24 பேர் உயிர் இழந்தனர். இந்தச் சோகம் மறைவதற்குள் மற்றொரு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா தலைநகரம் மும்பைக்கு அருகே பல்கார் மாவட்டம் உள்ளது. இங்குள்ள விரார் நகரில் விஜய் வல்லாப் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இங்கு கொரோனாவுக்காக சிறப்பு சிகிச்சை அளித்து வந்தனர்.
90 கொரோனா நோயாளிகள் சிக்சை பெற்று வந்தார்கள். அவர்களில் உடல் நிலை மோசமாக இருந்த 16 பேர் தீவிர சிகிச்சை வார்டில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த வார்ட் 2-வது மாடியில் இருந்தது.
இன்று அதிகாலை 3.15 மணிக்கு அந்த வார்டில் திடீரென தீப்பற்றியது. அப்போது 2 தாதிகள் மட்டும் பணியில் இருந்தனர். தீ பிடித்ததும் அவர்கள் வெளியே ஓடி வந்தார்கள்.
அதற்குள் வார்டு முழுவதும் தீ மளமளவென பரவியது. படுக்கையில் இருந்த நோயாளிகள் சிக்கிக்கொண்டனர். ஏற்கனவே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இருந்த அவர்களால் உடனே எழுந்து வெளியே ஓட முடியவில்லை.
அவர்கள் அனைவரையும் தீ சூழ்ந்து கொண்டது. மேலும் வார்ட் முழுவதும் புகை பரவியது. அதில் சிக்கிக் கொண்ட 13 நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 3 பேர் மட்டும் உயிர் தப்பினார்கள்.
தீவிர சிகிச்சை வார்ட் அருகே உள்ள மற்ற வார்டுகளிலும் கொரோனா நோயாளிகள் இருந்தனர். அவர்கள் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீப்பற்றியதை அறிந்து தீயணைப்புப்படையினர் விரைந்து வந்தனர். அதற்குள் வார்ட் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் இருந்த சில நோயாளிகள் உள்பட 21 பேரை மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மீதியுள்ள நோயாளிகளுக்கு தொடர்ந்து அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ பிடித்ததற்கான காரணம் முழுமையாகத் தெரியவில்லை. அந்த வார்டில் ஏ.சி. இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக தீ பிடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Reported by : Sisil.L