பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு

மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்குப் பின் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர்.


அமெரிக்காவின் பிரபல மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ்.  அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ்.


கடந்த 1975ஆம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார். அதன்பின், அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார்.


அந்நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்த மெலிண்டா கேட்சை சந்தித்து பில் கேட்ஸ் பின்னர் ஹவாயில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.


அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2000ஆம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.  இலாபநோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


இந்நிலையில், இந்தத் தம்பதி 27 ஆண்டுகளுக்குப் பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இது தொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:


கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டுள்ளன.


இந்தப் பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *