தன்னுடைய கடமைகளை உணர்ந்து ஆரோக்கியமான தளத்தில் பயணிக்கின்றதா யாழ்பாணப் பல்கலைக்கழகம்.

ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்தமான தமிழ்மக்களுடைய பிரச்சினைகளை தங்களுடைய பிரச்சினையாகவும் பொறுப்பாகவும் முன்னெடுத்தச்சென்ற வகையிலும் , தமிழ் மக்கள் தங்களின் அடையாளம் என்ற வகையிலாக பிரகாசித்த எத்தனையோ உயர்பதவி வகித்த கல்விமான்களையும் உருவாக்கித்தந்த மையமாகவும், இலங்கைத்தமிழர்களுடைய அடையாளமாகவும் பல தசாப்பதங்களாக திகழ்ந்து வந்த உயர்கல்விக்கூடமான யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் இன்றைய காலகட்டங்களில் தன்னுடைய அடையாளங்கள் யாவற்றையும் படிப்படியாக இழந்து சுழியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.

உண்மையில் இதற்கான காரணங்களை என்னவென்று தேட முற்படும்போதெல்லாம் சிலருடைய பதில் அரசு திட்டமிட்டு இங்குள்ள வளங்களையும் மாணவர் ஒற்றுமையையும் அழிக்கின்றது..?  என்றோ அல்லது திட்டமிட்ட வகையிலான கலாச்சார அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றோ யாரோ ஒருவர் மீது பழி போட்டு விட்டு  கடந்து போகின்ற ஒரு போக்கு தொடர்கின்றதே தவிர, கல்வி கற்கும் மாணவர்களோ அல்லது அங்குள்ள விரிவுரையாளர்களோ யாரும் தங்கள் மீது உள்ள தவறுகளை பேசத்தயாராகவும் இல்லை.., அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையோராகவும் இல்லை.கடந்த 08.10.2020 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் கலைப்பீட 2ம் மற்றும் 3ம் வருட மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற பிரச்சினை யாவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து அந்தப்பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்கவேண்டிய விரிவுரையாளர்கள் கூட மாணவர்களுடன் மேலும் விவாதத்தில் ஈடுபட்டு பொலிஸாரின் உதவியுடன்  பிரச்சினை தீர்க்கப்பட்டு பின்னர் விரிவுரையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு, தொடர்ந்து 21 மாணவர்களுக்கு வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே அங்கு கடமையில் இருந்த விரிவுரையாளர்களாக இருக்கலாம் அல்லது பிரச்சினைக்கு காரணமாக இருந்த மாணவர்களாக இருக்கலாம் யாருமே தங்களுக்கு உள்ள சமூகப்பொறுப்பு என்பது தொடர்பாக எவ்வளவு தூரம் ஆரோக்கியமான புரிதலுடன் உள்ளனர், மாணவர்களுக்கானதா பல்கலைக்கழகம்..? அல்லது விரிவுரையாளர்களுக்கானதா பல்கலைக்கழகம்..? யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தமிழர்களுடைய அடையாளமாக இருக்கின்றதா என பல விடயங்களை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய தேவையேற்பட்டுள்ளதுயாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களிடையே காலாதிகாலமாக இருக்கக்கூடிய இந்த சீனியர் – ஜூனியர் இடையேயான ஒரு முறுகலின் வெளிப்பாடே இந்த பிரச்சினையும் கூட. யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட மாணவர்களை பொறுத்தவரை இன ஒடுக்குமுறை சார்ந்து தமிழர்களை சிங்களவர்கள் ஒடுக்குகிறார்கள், தமிழர்களின் அடக்கு முறைக்கான தீர்வுகள் எவை என்பன பற்றி எல்லாம் காலாதிகாலமாக பேசிக்கொண்டே வருகின்ற , அதற்காக குரல் கொடுத்து வருகின்ற ஒருபோக்கு காணப்படுகின்ற போதிலும் கூட அது எந்தளவு தூரம் அவர்களுடைய ஆழ்மனதில் இருந்து வெளியே வருகின்றது என்பது கேள்விக்குட்படுத்தப்படவேண்டியதாகின்றது. ஏனெனில் சிங்களவர்கள் தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதாக கூறிக்கொண்டிருக்கும் இதே மாணவர்கள் தான் தங்களுடைய புதுமுக சகோதரர்களை அல்லது கீழ் வகுப்பு மாணவர்களை பகிடிவதை என்ற போர்வைக்குள்ளேயோ அல்லது நான் சீனியர் எனக்கு நீ அடங்கிப்போகத்தான் வேண்டும் என்ற ஒரு விதமான கருத்துருவுக்குள்ளேயோ அடக்கியாள முற்படுகின்றனர். இலகுவாக சிந்திக்க வேண்டியது ,து தான் தான்..“ சிறிய பல்கலைக்கழக வளாகம் ,எங்களுடைய மொழியை பேசுகின்ற எங்களுடைய சகோதரர்களையே பிரிவினைகள் கூறி அடக்கியாள  முற்படும் நாம்,   அடக்கு முறையை ஏதோவொரு விதத்தில் செய்து கொண்டிருக்கும் நாம் , – எந்த கோணத்தில் பெரும்பான்மை சமூகத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல்கொடுக்க தகுதியானவர்கள் என்பதை ஒவ்வொரு மாணவனும் சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது

மாணவர்களிடையே அதிகரித்து வரும் இந்தப்பிரச்சினைகளுக்கு விரிவுரையாளர்கள் – மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள பாரிய இடைவெளியே மிக முக்கியமான காரணம் என்பதை மறுத்து விடலாகாது. விரிவுரையாளரகள் பலரும் பாடத்திட்டத்தை கற்பிப்பது , அதற்கான பெறுமதிகளை வழங்குவது என்ற செயற்பாட்டுடன் தங்களுடைய மாணவர்ளுடனான உறவை முடித்துக்கொள்கின்ற ஒரு போக்கே தொடர்கின்றது. அதே நேரத்தில் யாழ்.பல்கலைகழக மட்டத்தில் குறிப்பிட்ட சில  விரிவுரையாளர்களைத் தவிர ஏனைய  பெரும்பாலான விரிவுரையாளர்கள் மாணவர்களுடைய சுய ஒழுக்கம் பற்றியோ, அல்லது அவர்களுடைய கல்விக்கான தேவைகள் என்ன என்பது பற்றியோ,  மாணவர்களுக்கு என்ன பிரச்சினைகள் என்பது பற்றி சிந்திக்கவோ அல்லது மாணவர்களுடன் பேசவோ தயாராகவேயில்லை. மாணவர்கள் தவறு செய்தவுடன் அவர்களுடைய வகுப்புத்தடை பற்றி மட்டும் அதிகம் அலட்டிக்கொள்ளும் பல்கலைக்கழக உயர்மட்டம் அதிலிருந்து அவர்களை மீட்பது எப்படி..? அல்லது இந்தப்பிரச்சினைகளுக்கான ஆக்கபூர்வமான முடிவுகள் எவையாவது உள்ளனவா? என சிந்திக்க தவறிவிடுகின்றனர்.

விரிவுரையாளரகள் மாணவர்களுடன் இணைந்து பயணிக்க முன்வராத வரை இந்தப்பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.  விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக கல்வித்திட்டங்களுக்கு அப்பால் மாணவர்களுடைய சமூகப்பொறுப்பை உணர வைக்க வேண்டிய மிகப்பெரும் பணியை ஆற்ற முன்வர வேண்டும்

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற போர்கள், இடப்பெயர்வுகள் அவற்றின் மூலமான இழப்புக்கள் என பல விடயங்கள் காரணமாக வட -கிழக்கு தமிழர் சமூகமானது இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது  கல்வி , பொருளாதாரம், சமூக மேம்பாடு என பல்வேறுபட்ட வகையிலும் பின்தங்கி நிற்கின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது.  இந்த நிலையில் எங்களுடைய சமூகத்தை முன்னேற்ற கல்வி மட்டுமே இப்போதைக்கு எம்மிடம் உள்ள ஆயுதம் என்பதையும் அதனை மேலும் பட்டை தீட்டி கூர்மையாக்க வேண்டிய தேவை இந்த யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மிகப்பெரிய கடமை என்பதையும் ஒவ்வொரு பல்கலைகழக மாணவர்களும் – விரிவுரையாளர்களும்  உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

எங்களுடைய தமிழ்ச்சமூகங்களில் காலை தொடங்கி மாலை வரை கூலிவேலை செய்யும் ஒரு கூலித்தொழிலாளியிடம் சென்று ஏன் இப்படி உழைக்கின்றீர்கள் எனக் கேட்டால் “ என் புள்ளைய படிக்க வைச்சு கெம்பஸூக்கு அனுப்பிட வேணும் ” என்ற பதிலை இப்பொழுதும் கேட்க முடியும். அது போலத்தான் உயர்தரம் படிக்கின்ற மாணவர்களிடமும் இலக்கு என்ன என கேட்டால் “ படிச்சு எப்படியாச்சும் கெம்பஸ் போய்டனும்” என்கின்ற  பதிலே கிடைக்கும்.  இன்னமும் இந்த சமூகம் கல்வியை நம்பி நடைபோட்டுக்கொண்டிருக்கின்றது என்பதே இந்த பதில்கள் எடுத்துக்காட்டுகின்றன

இப்படியான சமூகம் ஒன்றில் வாழும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தலைமுறைக்கு ஆக்கபூர்வமான முன்மாதிரிகளாக திகழவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பல்கலைக்கழக கல்வி மீதான நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கான இலவசக்கருத்தரங்குகளை செய்தல்,  தமிழர் பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை ஆவணப்படுத்தல் மற்றும் அதற்கான தீர்வுத்திட்டங்களை ஆவணங்களாக வெளிக்கொண்டுவருதல், மாணவர்களுக்கான உளப்படுத்தல் கருத்தரங்குகளை மேற்கொள்ளுதல், இறுதி வருட மாணவர் ஆய்வுகளை சமூகத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தல் என பயணிக்க எத்தனையோ வழிமுடுறைகள் உள்ளன.

இவையெல்லாவற்றையும் விடுத்து விட்டு இன்னமும் பகிடிவதைகள் , சீனியர் – யூனியர் பிரச்சினைகள், தேவையற்ற சண்டைகள் என பல்கலைக்கழக மாணவர்கள் பயணிப்பது அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பதை உணர்ந்து செயலாற்ற மாணவர்கள் முன் வரவேண்டிய அதே நேரத்தில் மாணவர்களும் தங்களுடைய பிள்ளைகள் தான் என்ற கோணத்தில் சிந்திக்க விரிவுரையாளர்களும் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் தானே. அவர்களுடன் தோழமையாக பழகுவதாலும் பல ஆரோக்கியமான மாற்றங்களை  ஏற்படுத்தலாம் என்பதை விரிவுரையாளர்கள் உணர்ந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறாக பயணிக்க முனைகின்ற போது மட்டுமே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனக்கான அடையாளத்தை பேணிக்கொள்ள முடியுதங்களுக்குள்ள சமூகப்பொறுப்பை  உணர்ந்து கொள்ளாது,  பிரிவினைகள் பாராட்டி நீ – நான் பெரியவன் என பல்கலைக்கழக சமூத்தினர் இனியும் பயணிப்பார்களாயின் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகமானது தன்னுடைய அடையாளங்கள் அனைத்தையும் இழந்து உயர் கல்வி கற்பிக்கப்பட்டாலும்  மீண்டும் பாலர்பாடசாலையாகவே மாறிவிட வேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதை மாணவர்களும் – விரிவுரையாளர்களும் நினைவில் வைத்து செயலாற்ற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *