கனடாவில் கொவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இயல்பு வாழ்க்கை சீா்குலைவுகளால் சமீபத்தில் அங்கு குடியேறியவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பத் தலைப்பட்டுள்ளனர்.
கனடாவில் 2020ஆம் ஆண்டு இறுதி வரையில் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதியில் தங்கியிருந்த புலம்பெயர்ந்தவர்களில் குறைந்தது 4 வீதம் பேர் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர். 5 வருடங்களுக்குள் கனடாவில் குடியேறிய புலம்பெயர்ந்தவர்களின் தொகை 10 இலட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு இறுதியில் 10 இலட்சத்து 19 ஆயிரமாகக் குறைந்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 5 முதல் 10 ஆண்டுகளாக கனடாவில் தங்கியிருந்த புலம்பெயர் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையும் 2019 இல் 11 இலட்சத்து 70 ஆயிரமாக இருந்து 2020 இல் 11 இலட்சத்து 46 ஆயிரமாகக் குறைந்துவிட்டதாக தரவு காட்டுகிறது.
மந்தநிலை காலங்களில் புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்வது சாதாரணமானதுதான் என கல்கரி பல்கலைக்கழக பொதுக் கொள்கை தொடர்பான ஆராய்ச்சியாளரான ரோபேர்ட் பால்கனர் கூறினார்.
புலம்பெயர்ந்தவர்கள் வேலை இழந்திருந்தால் வாடகை உள்ளிட்ட செலவுகளை அவர்களால் சமாளிக்க முடியாது. எனவே, அவர்கள் சொந்த நாடு திரும்பி குடும்பத்துடன் வாழ முடிவு செய்கின்றனர் எனவும் அவா் குறிப்பிட்டார். 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மந்தநிலை ஆகியவற்றின் போது புதிய குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை சுமார் மூன்று வீதம் குறைந்தது எனவும் அவா் சுட்டிக்காட்டினார். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு விரைவாக மீளாவிட்டால் வெளியேறிய பலர் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள் எனவும் அவா் தெரிவித்தார்.
கனடாவில் பிறந்தவர்களை விட அங்கு அண்மைக் காலங்களில் குடியேறியவர்களின் வேலை இழக்கும் வாய்ப்பு தொற்று நோய் நெருக்கடி காலப்பகுதியில் அதிகமாக உள்ளதாக கனேடிய புள்ளிவிபரவில் துறை ஓகஸ்ட் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், குறைந்த நேர வேலை, குறைந்த சம்பளம்
ஆகிய நெருக்கடிகளையும் அவா்கள் எதிர்கொள்வதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
தொற்று நோய் நெருக்கடியால் 2009-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டில் கனடாவுக்கான குடியேற்றவாசிகளின் தொகை சுமார் 40 வீதம் குறைத்துள்ளது. இந்நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 12 இலட்சம் குடியேற்றவாசிகளை வரவேற்க கனடிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக இவ்வாண்டு 4 இலட்சத்துக்கு மேற்பட்ட குடியேற்றவாசிகளை உள்ளீர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் கடுமையான கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் இந்த ஆண்டு இலக்கை அடைவது கடினம் என கல்கரி பல்கலைக்கழக பொதுக் கொள்கை தொடர்பான ஆய்வாளர் ரோபேர்ட் பால்கனர் கூறினார்.
எனினும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 12 இலட்சம் குடியேற்றவாசிகளை வரவேற்கும் இலக்கை தமது அரசாங்கம் பூா்த்தி செய்யும் எள கனேடிய குடிவரவு அமைச்சர் மார்கோ மென்டிசினோவின் செய்தித் தொடர்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.