மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit – Cardiac Catheterization Laboratory) இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை (இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம்) இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீடு காரணமாக கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
இது தொடர்பான விடயத்தினை கையாளும் விவகாரம் இரா.சாணக்கியனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனினால் வழங்கப்பட்டது.
இதனையடுத்து இரா.சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆகியோர் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவினை சந்தித்து இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதயவியல் பிரிவிற்கு கொண்டுவரப்பட வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் முன்னமே தீர்மானித்தபடி எமது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அவதானம் செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியாரச்சியினை வரவழைத்து இருதயவியல் பிரிவிற்கான உபகரணங்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கையளிப்பதற்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு வைத்தியசாலையிலும் இவ் உபகரணம் இல்லாமையினால் பல வருடங்களாக மக்கள் உரிய நேரத்திற்கு சிகிச்சையின்றி பல சிரமங்களுக்கும் மத்தியில் வெளி மாகாணங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய பல உயிர்களை இழந்துள்ளோம்.
இப் பிரச்சினை இனி முடிவுக்கு கொண்டுவரப்படும். எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க நாம் தயாராக உள்ளோம்” – இந்திய வெளிவிவகார அமைச்சர் வருகை தொடர்பாக பாராளுமன்றில் சுமந்திரன் !
இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தது போல ஜனாதிபதி செயற்பட்டால் எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க நாம் தயாராக உள்ளோம்” தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச்சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் முன்வைத்துள்ள கருத்தொன்றை சபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் தமது ஒத்துழைப்புகள் நீண்டகாலமாக காணப்பட்டுகின்றது.
அதேபோல் இலங்கையின் அரசியல் தளத்தில் இன ரீதியிலான ஒத்துழைப்பை தாம் எதிர்பார்க்கின்றோம் எனவும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக இடம்பெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
இதில் அதிகார பகிர்வு விடயத்திலும் அரசியல் அமைப்பில் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டை கையாளும் என தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.
அதேபோல் ஜனாதிபதியும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு உறுதிப்பாடு ஒன்றினை கொடுத்துள்ளார். அதாவது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என சகலரதும் நலன்களுக்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதியும் வாக்குறுதியளித்துள்ளார். அரசாங்கத்தின் உண்மையான எதிர்பார்ப்பு இதுவென்றால் அதற்காக எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.