ஐக்கிய மக்கள் சக்தியை நாம் தான் உருவாக்கினோம். சரத் பொன்சேகா நேற்று வந்தவர். அரசியலில் நான் சிறு பையன் கிடையாது” – மாவீரர்தினம் தொடர்பான பொன்சேகாவின் கருத்துக்கு மனோகணேசன் பதில் !

மாவீரர் தினத்தில் வடக்கில் புரவி ஏற்பட்டிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன் எனவும் மாவீரர்தினம் தொடர்பாகவும்   ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் பாராளுமன்றில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய ஆதங்கத்தை பாராளுமன்றில் முன்வைத்திருந்தனர்.   தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்றைய தினம் இது தொடர்பாக பாராளுமன்றில் உரையாற்றியருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனோ கணேசன் பாராளுமன்றில் நேற்று உரையாற்றும்போது ,

“2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குச் சென்று பரப்புரை முன்னெடுத்தவன் நான் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் சரத் பொன்சேகாவை கைவிட்டுச் செல்ல கடைசி வரை நான் அவருடன் இருந்தேன். இன்றும் சரத் பொன்சேகாவை மதிக்கின்றேன். ஆனால், அவர் நன்றி மறந்து உரையாற்றியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, அவ்வமைப்பை இங்கு நினைவுகூர முடியாது. புலிக்கொடி மற்றும் புலிக் கொள்கைகளை முன்னிறுத்தி நிகழ்வுகளை நடத்தமுடியாது. ஆனால், உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அது போராளியாக இருந்தால்கூட நினைவுகூரலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பு என்பதால் அதனை நீக்குமாறு கோரி தமிழ் அரசியல்வாதிகள் நீதிமன்றம் சென்று வழக்குத் தாக்கல் செய்யலாம். இவ்வாறு நான் கூறிய தகவலைத் தெளிவாக புரிந்துகொள்ள முடியாமல், மேல் நோக்கி பார்த்து உமிழ்வது போல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.

நினைவேந்தல் குறித்து நான் வெளியிட்ட கருத்தையும், மாவீரர் நாள் நினைவேந்தலையும் தொடர்புபடுத்தி, மனோ கணேசனின் கருத்து எமது கட்சியின் கருத்து அல்ல எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியை நாம் தான் உருவாக்கினோம். சரத் பொன்சேகா நேற்று வந்தவர். அரசியலில் நான் சிறு பையன் கிடையாது. ஜே.வி.பிக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு குறித்து எமக்கு எவரும் பாடம் எடுக்கவேண்டியதில்லை.

அதேபோல புரவி புயல் மாவீரர் நாளன்று வந்திருந்தால் மகிழ்ச்சி என்ற தொனியில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்தும் தவறானது. என்னை அமைச்சர் ஒருவர் முட்டாள் என விமர்சித்தார். நீங்களும் அந்த நிலைக்கு விழுந்து விடாதீர்கள்.

மாவீரர் நாள் நினைவேந்தலில்கூட தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து வாழ்வதற்கு இன்னமும் வாய்ப்பு உள்ளது என்ற விடயத்தையே நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அரச தொலைக்காட்சியொன்று அதனைப் பெருப்பித்து மக்களைத் திசை திருப்பும் விதத்தில் செய்தி வெளியிட்டது” எனவும் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார் மனோகணேசன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *