இஸ்ரேல் நாட்டுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்குக் கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.
காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறது. மேற்கு கரைப் பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்கு கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டுத் தலத்தில் கடந்த 10ஆம் திகதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தியது.
இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ரொக்கெட் தாக்குதலை நடத்தி வருகின்றன.
காசா முனையில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து மேற்கு கரைப் பகுதியிலும் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதலைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 263 ஆக அதிகரித்துள்ளது. அதில் காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர், குழந்தைகள், பெண்கள் உட்பட 227 பேரும், மேற்குக் கரைப் பகுதியில் 24 பேரும், இஸ்ரேலில் 12 பேரும் (கேரளாவைச் சேர்ந்த சவுமியா என்ற பெண் உள்பட) உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. சண்டையை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வரும் சூழ்நிலையில் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது என ஹமாஸ் அமைப்பின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காசாவின் போர்நிறுத்த ஒப்பந்த முடிவை இஸ்ரேலிய அமைச்சரவையும் உறுதி செய்துள்ளது. ஆனால், நேரம் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
—————–
Reported by : Sisil.L