ஆயர் மறைவுக்கு கறுப்பு கொடி கட்டி அஞ்சலி செலுத்த சிறிதரன் எம்.பி.அழைப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை வட, கிழக்கில்  கறுப்புக் கொடிகட்டி முன்னாள் ஆயருக்கு அஞ்சலி செலுத்துவோம் சிறிதரன் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று உயிரிழந்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்தேசிய மண்ணிலே தமிழ் மக்களுடைய உரிமைக்காகவும் அவர்களுடைய வாழ்வுக்காகவும் ஒரு நீண்ட பெரும் பாதையிலே தன்னுடைய ஆழமான  பங்கினை  ஆத்மார்த்தமாகவும்  உணர்வாகவும்  வெளிப்படுத்திய ஆன்மா ஒன்று மீளாத்துயில் கொள்கின்றது.தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதிகமான பற்றுக் கொண்ட ஒரு மனிதனாக நின்று அவர் தன்னை அர்ப்பணித்து இன்று   உறக்கம் கொள்கின்ற அவரை நினைக்கும் போது நெஞ்சம் துடிக்கின்றது. இப்படியான ஓர் ஆயர்  இனி  கிடைப்பாரா என்பது சந்தேகமே! தமிழ் மக்களுடைய

உரிமைக்காக,  வாழ்வுக்காக, வாழ்வாதாரத்துக்காக, இருப்புக்காக  குரல் கொடுத்த ஒரு மனிதன்…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின்  முன்னால் சென்று மிகத் துணிச்சலோடு ஆதாரத்தோடு ஒரு லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போய் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை வெளிப்படையாகச் சொன்ன ஒரு மனிதர்

நெடுந்தீவில் பிறந்திருந்தாலும் வடக்கு-கிழக்கு தாயகம் எங்கும் வாழும் அனைத்து தமிழர்கள் மீதும் தமிழ் மண் மீதும் உறுதியான பற்றுக்கொண்ட ஒரு மனிதனை தமிழ் மக்கள் இழந்து தவிக்கிறார்கள்.

அவருடைய இறுதித் திருப்பலி இடம்பெறும் நாளான எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு எங்கும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் கறுப்புக் கொடிகளோடு அவருடைய  உருவப்படங்கள் தாங்கிய நிலையில் அஞ்சலி செலுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நான் கேட்டுக்கொள்கின்றேன். எனவே ஆயரின் இழப்பு தமிழ் மக்களுக்கு ஏற்கமுடியாத ஒன்று எனவும் தெரிவித்தார்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *