TAMIL NEWS

TAMIL NEWS

துமிந்த சில்வா பிரச்சினை போன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகள் பிரச்சினையையும் தமிழ் அரசியல்வாதிகள் கையாள வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுவிக்கும் மனுவில் தான் கையொப்பமிட்டதாக உறுதிப்படுத்தியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கை வருமாறு…,

முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொலை குற்றச்சாட்டின் நிமித்தம் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். சம்பவம் நிகழும் போது அவர், மது போதையில் இருந்துள்ளார். தற்போது, அவர் சுமார் ஐந்து வருடங்களை சிறையில் கழித்துள்ளார். அவர் மீது சட்டத்தை மீறிய வேறு குற்றங்கள் இருப்பின், சட்ட ஒழுங்கு துறை அவர் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடரலாம்.

நான், அரசியல்வாதி என்பதை விட ஒரு மனித உரிமை போராளி. வெள்ளை வேன் கடத்தல், சட்டத்துக்கு அப்பாலான கடத்தல் கொலை, கப்பம், அடாத்தான கைது ஆகியவற்றுக்கு எதிராக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நான் போராடியுள்ளேன். இளையோர் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பட கூடாது. குற்ற செயல்களில் ஈடுபடும், இளையோருக்கு திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது என் பொதுவான கொள்கை நிலைப்பாடு. துமிந்த சில்வா, ஏற்கனவே ஐந்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் அங்கே சீர்திருத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என நம்புகிறேன். அவருக்கு திருந்தி, தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நான் எண்ணுகிறேன்.

அதேபோல், அரசியல் சார்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட தமிழ் கைதிகளும் சிறைகளில் உள்ளார்கள். இளைஞர்களாக இருக்கும்போது கைது செய்யப்பட்டு, தம் வாழ்நாளில் கணிசமான காலத்தை இவர்கள் சிறையில் கழித்துள்ளார்கள். அவர்களில், தீர்ப்பு வழங்கப்பட்டவர்களும், விசாரணை கைதிகளும், வழக்குகளை எதிர்நோக்குகின்றவர்களும் உள்ளார்கள். அவர்களும் சீர்திருந்தி, புனர்வாழ்வு பெற்று, சமூகத்துக்குள் சென்று, தம் குடும்பங்களுடன், மனைவி மக்களுடன் வாழ விடுதலை வழங்கப்பட வேண்டும் எனவும் கோருகிறேன்.

யார் என்ன சொன்னாலும், பெரும்பான்மை இனத்தை சார்ந்த தீர்ப்பு வழங்கப்பட்ட மற்றும் விசாரணை கைதிகளுக்கான பொது மன்னிப்பு, விடுதலை என்பவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை மனித உரிமையாளர்களும், சர்வதேச சமூகமும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கின்றன.

எனவே இவ்விவகாரம், தமிழ் கைதிகளின் பிரச்சினையையும் தேசிய அரங்குக்கு கட்டாயமாக கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கின்றேன். இந்நிலையில், தமிழ் அரசியல்வாதிகளும், மனித உரிமையாளர்களும், இதை பயன்படுத்தி, நீண்டகால, தமிழ் கைதிகளின் பிரச்சினையையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கு எப்போதும் போல் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.

என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனை அடுத்து இஸ்ரேலுக்கு சூடானும் அங்கீகாரம்!

பாலஸ்தீன பிரச்சினை காரணமாக, இஸ்ரேலுக்கும், பெரும்பாலான முஸ்லிம் நாடுகளுக்கும் நீண்ட காலமாக பகை நிலவி வருகிறது. எகிப்து, ஜோர்தானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்வரை இஸ்ரேலை அங்கீகரிக்கக் கூடாது என்று அரபு லீக் அமைப்பு முடிவு செய்திருந்தன. இந்த நிலையில் படிப்படியாக பல நாடுகள் இஸ்ரேலின் சுதந்திரத்தை அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக இந்த வருடம் ஆகஸ்ட் மாதமளவில் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்திருந்தன. இந்த நிலையில் இஸ்ரேலுடன் நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்த சூடான் முன் வந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள சூடான் சம்மதம் தெரிவித்திருப்பதாக வொஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் அறிவித்தார்.

இதுதொடர்பாக தனது ஓவல் அலுவலகத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சூடான் பிரதமர் அப்துல்லா ஹாம்டாக்குடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே, இந்த அறிவிப்பை செய்தியாளர்களிடம் அவர் வெளியிட்டார்.

இதற்கிடையே, பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சூடான் தலைநகர் கார்ட்டூமில் கடந்த 1967ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில், இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தற்போது அந்த சூடானே இஸ்ரேலுக்கு அங்கீகாரம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் அமைதிக்கான புதிய யுகம் தொடங்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *