இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா என அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதற்கிடையே, வைரஸ்கள் அல்லது மாறுபாடு அடைந்த வைரஸ்கள் அவை கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அடையாளம் காணப்படக் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு பெயர்களை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா வைரஸுக்கு ‘டெல்டா’ என பெயரிட்டுள்ளது.
இதேபோல், பிரிட்டனில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா அல்பா எனவும், தென் ஆபிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா பீட்டா எனவும், பிரேஸிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா எப்சிலான் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளது.
—————
Reported by : Sisil.L