மருத்துவ பீட ஆய்வுகூடத்துக்குத் தேவையான பொருட்கள் சுகாதார அமைச்சிடமே இல்லை : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

கடந்த சில நாட்களாக குடாநாட்டின் ஊடகங்கள் சிலவற்றில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் கொவிட்-19 தொற்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் தடைப்பட்டமைக்கு வட மாகாணத்தின் மாகாண சுகாதார
திணைக்களத்தின் அசண்டையே காரணம் என்ற வகையில் செய்தி
கள் வெளிவந்துள்ளமையை அவதானித்து கவலையடைவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்திகள் எமது திணைக்களம் தொடர்பாக தவறான அபிப்பிராயத்தை மக்களிடையே உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன.
எனவே, இது தொடர்பான உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றோம் எனக் குறிப்பிட்டு நேற்று அவர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
கொவிட் பெரும் தொற்று இலங்கையில் ஆரம்பித்த காலத்தில் வட மாகாணத் தில் கொவிட் தொற்றுக்குரிய பி.சி.ஆர். பரிசோதனை வசதிகள் ஏதும் இருக்கவில்லை. மாகாண சுகாதாரத் திணைக்களம் கேட்டுக்கொண்டதன் பேரில் யாழ். மருத்துவபீட ஒட்டுண்ணியியல் துறையின் ஆய்வுகூடத்தில் இப் பரிசோதனைகளைச் செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வு
கூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளைச் செய்வதற்கு பல்வேறு அழிபொருள்கள் (ஊழளெரஅயடிடநள) தேவை. இவை இரண்டு
வகைப்படும். பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரத்திற்கான அழிபொருள்கள் – இவை இயந்திரத்தின் வகைக்குப் பொருத்தமானவையாக இருக்க வேண்டும். ஆய்வு கூடத்தின் ஏனைய அழிபொருள்கள் – தொற்று நீக்கிகள், முகக் கவசங்கள், அங்கிகள் எனப் பல.

இந்த அழி பொருள்களில் ஆய்வுகூட இயந்திரத்திற்கான அழிபொருள்கள் ஒவ்வொரு முறையும் நேரடியாக சுகாதார அமைச்சின் பணிப்பாளரின் அனுமதியுடன் கொழும்பில் அமைந்துள்ள மருந்து வழங்கல் பிரிவிலிருந்து வழங்கப்படும்.அதற்கான கோரிக்கைக் கடிதம் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்படல் வேண்டும். அந்தப் பொருள்களை பீடாதிபதியின் பெயர் குறிப்பிடப்பட்டு வழங்கப்படும் அனுமதிக் கடிதத்ததுடன்
செல்லும் யாழ். போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தின் மருந்தாளர் எடுத்து வந்து மருத்துவ பீடத்திற்கு வழங்குவார்.

மருத்துவபீடத்திற்கும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தை மாகாண சுகாதாரத் திணைக்களம் ஒருங்கிணைக்கும்.  இந்த விடயங்கள் சுகாதார அமைச்சின் பணிப்புக்கு அமைய எம்மாலும் மருத்துவ பீடத்தினராலும் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதேவேளை ஏனைய அழிபொருள்களும் ஆரம்பத்தில் நேரடியாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல்  பிரிவினரால் வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றின் விநியோகம் சீரற்றும் முழுமையற்றும் காணப்பட்டமையால் அதற்கான
பொறுப்பை மாகாண சுகாதாரத் திணைக்களம் பொறுப்பேற்றுக் கொண்டது. இதன்படி இவ்வழி பொருள்கள் தொடர்ச்சியாக எம்மால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

காலக்கிரமத்தில் யாழ்.போதனா வைத்தியசாலைகளிலும் இப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையிலுள்ள
பி.சி.ஆர். இயந்திரங்கள் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் பல்வேறு வகை மாதிரிகள் ஆகும். அவ்வகையில் யாழ். மருத்துவ பீடத்திற்கான பி.சி.ஆர். இயந்திரத்திலிருந்து யாழ். போதனா வைத்தியசாலையின் இயந்திரம் வேறுபட்டது. இவற்றுக்கு வகைப்பொருத்தமான அழிபொருட்களை மட்டுமே பாவிக்க முடியும்.

கடந்த சில வாரங்களாக மருத்துவபீடத்தின் பி.சி.ஆர். இயந்திரத்திற்குரிய குறிப்பிட்ட அழி பொருள் சுகாதார அமைச்சின் கையிருப்பில் இல்லாமல் போயுள்ளது. இதனால், சுகாதார அமைச்சு உள்ளுர் கொள்வனவு முறையில் குறிப்பிட்ட பொருளைக் கொள்வனவு செய்ய முடிவு செய்து வழங்குநருக்கு கொள்வனவு கட்டளையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,
வழங்குநரால் குறிப்பிட்ட அழிபொருளை இன்று வரை வழங்க முடியாமல் உள்ளது.

மருத்துவ உபகரணங்கள் குறிப்பாக ஆய்வுகூட உபகரணங்கள் பல கோடி ரூபா பெறுமதியானவை. இவற்றுக்குரிய அழிபொருட்கள் வகை பொருத்தமானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த உபகரணங்களில் பழுது ஏற்படலாம் என்பதுடன் வழங்குநர் வழங்கியுள்ள உத்தரவாதங்களும் செயலிழந்து
விடும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வழங்குநர் மருத்துவ பீடத்தின் இயந்திரத்திற்குப் பொருத்தமற்ற வேறு வகை அழிபொருளை மட்டுமே கையிருப்பில் வைத்துள்ளார்.

குறிப்பிட்ட அழிபொருளை பெறுவதற்கு வட மாகாண சுகாதார திணைக்களமும் இலங்கை சுகாதார அமைச்சும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அழிபொருட்கள் உரிய வழங்குநரிடம் இருந்து கிடைத்ததும் மருத்துவ பீடத்தின் பி.சி.ஆர். பரிசோதனைகளை மீள ஆரம்பிக்க முடியும்.
————————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *