சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கிய சமயத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக சவுதி அரேபியா இருந்தது.இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அந்த நாடு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.குறிப்பாக 3 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நாட்டுக்குள் சர்வதேச பயணம் வைரஸ் பரவலைத் தூண்டக்கூடும் என்கிற கவலையால் சவுதி குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அந்த நாட்டரசு தடை விதித்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமுலுக்கு வந்த இந்தத் தடையால் வெளிநாடுகளில் பயின்று வரும் சவுதி அரேபியா மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதுவரை 1 கோடியே 10 லட்சம் பேருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டு விட்டது. இதன் மூலம் அங்கு வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சவுதி குடிமக்களின் சர்வதேச பயணங்களுக்கான கட்டுப் பாடுகளில் சில தளர்வுகள் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
அதுமட்டுமின்றி அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பயண காப்புறுதி வசதியுடன் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சவுதி அரேபியாவின் அரசு விமான நிறுவனமான சவுதியா 43 சர்வதேச இடங்கள் உட்பட 73 இடங்களுக்கு விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.
அதேசமயம் அதிக ஆபத்துள்ள நாடுகளாக வரையறுக்கப்பட்டுள்ள இந்தியா, ஈரான், ஏமன், துருக்கி மற்றும் லெபனான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
Reported by : Sisil.L