யாழ் குடா நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 55 பேர் நேற்று யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.
முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியைப் பேணாதவர்களைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னான்டோவின் அறிவுறுத்தலில் சிறப்பு நடவடிக்கை நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் மாநகரில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வீதிகளில் மட்டுமல்லாமல் நிறுவனங்கள், வியாபார நிலையங்களுக்குள் சென்ற பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 50 பேரைக் கைது செய்து பேருந்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் 55பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கான வழக்கு எதிர்வரும் ஜூலை 21,22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்படும் என்று பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டது.
————————–
Reported by : Sisil.L