சந்திரனில் மனிதன் முதன்முதல் காலடி பதித்தபோது அக்குழுவில் இடம்பெற்ற மூவரில் ஒருவரான மைக்கல் கொலின்ஸ் தனது 90 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் விண்வெளிப் பயணத்திட்டம் அப்பலோ-11 ஆகும்.
நிலவில் முதன் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ரோங்குடன், நிலவுப் பயணம் மேற்கொண்டவர் மைக்கேல் கொலின்ஸ். நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் அல்ட்ரின் ஆகியோர் நிலவில் இறங்கி நடந்தபோது, அப்பலோவின் கட்டுப்பாட்டு விண்கலத்தில் மைக்கேல் கொலின்ஸ் தங்கியிருந்து சுற்றுவட்டப்பாதை பணிகளைக் கவனித்தார். இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அப்பலோ-11 பூமிக்கு திரும்பியதை உலகமே கொண்டாடியது.
இந்த சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தில் இடம்பெற்றிருந்த விண்வெளி வீரரான மைக்கேல் கொலின்ஸ், முதுமை சார்ந்த உடல்நலக் கோளாறு மற்றும் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.
மைக்கேல் கொலின்ஸ் சுமார் 238,000 மைல் பயணித்து நிலவை நெருங்கி, நிலவில் இருந்து 69 மைல் தொலைவுக்கு வந்தபோதும் நிலவில் கால் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L