வடக்கு ஆபிரிக்க நாடான துனிசியாவின் எஸ்பக்ஸ் நகரிலிருந்து ஐரோப்பிய நாடான இத்தாலியின் லம்பிடுசா தீவுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கோடு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், சட்டவிரோதமாக மத்திய தரைக் கடலை கடக்கும் மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
ஆனால், அகதிகள் பயணித்த படகு மத்திய தரைக் கடலை நேற்று கடக்கும் போது திடீரென அலையில் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் படகு கடலில் மூழ்கியது. அப் படகில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினர்.
விபத்து குறித்து தகவலறிந்த துனிசியா கடற்படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால், கடற்படையினர் வருவதற்குள் படகில் இருந்த அகதிகள் 41 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 21 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியோரின் உடல்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதால் அவற்றைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Reported by : Sisil.L