மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொடக்கப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
நாட்டின் தலைநகர் நியாமியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் சில வகுப்பறைகள் பாடசாலை கட்டிடத்துக்குள்ளும், சில வகுப்பறைகள் பாடசாலைக்கு வெளியே வைக்கோலால் வேயப்பட்ட குடிசைகளிலும் நடந்து வந்தன.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இங்கு வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. மாணவர்கள் அனைவரும் உன்னிப்பாக பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தனர்.அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பள்ளிக் கூடத்தில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ பாடசாலை முழுவதும் பரவியது.கண்ணிமைக்கும் நேரத்தில் தீ நாலாபுறமும் சூழ்ந்ததால் மாணவர்கள் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர்.தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியாத நிலையில் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
Reported by : Sisil.L