மியன்மாரில் 90க்கும் மேற்பட்டவர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் உட்பட 90க்கும் அதிகமானவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என அரசியல்
கைதிகளுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என படையினர் விடுத்த வேண்டுகோளையும் மீறி இன்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்
ஆர்ப்பாட்டக்காரர்கள் தலையிலும் முதுகிலும் சுடப்படுவார்கள் என அரச தொலைக்காட்சி வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்ததையும் அலட்சியம் செய்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் எங்களை பறவைகளை-கோழிகளைக் கொல்வது போலச் சுடுகின்றனர். வீடுகளில் கூட கொல்கின்றனர் என ஒருவர் ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ளார். எனினும் நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாளில் நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பவை, அச்சத்தை ஏற்படுத்துபவை, காட்டுமிராண்டித்தனமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவின் பிரதி இயக்குநர் பிலிப் ரொபேட்சன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இதுவே மிகவும் இரத்தக்களறி மிகுந்த நாள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யங்கூனில் அமெரிக்க கலாசார நிலையத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
Reported by : Sisil.L