அமைச்சர் டக்ளசை சந்திக்க மாட்டோம்:வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் சங்கத் தலைவி

ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள போதும் தாம், அவரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை. அவரை சந்திக்கும் விருப்பமும் இல்லை என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் சங்கத் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்புக் கூற வேண்டும் என தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே எங்கள் உறவுகள் அதிகம் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசின் காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு அரசாலோ அவ்வரசில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவினாலோ எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.மாறாக தங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபியும் காரணம் எனத்

தெரிவித்த தாய்மார்களை நீதிமன்றில் நிறுத்தப் போவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாம் அவரை எப்படிச் சந்திக்க முடியும்? அவ்வாறு சந்தித்ததாலும் அமைச்சரால் எங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் தொடர்பில் என்ன நியாயத்தை பெற்றுத் தர முடியும்?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இலங்கை அரசினால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது.

இந்த நிலையில் அந்த அரசின் பிரதிநிதியாக உள்ள அமைச்சரைச் சந்திப்பதில் பயனில்லை. சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத் தர வேண்டும்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் சார்பாக நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்குத் தயாரில்லை என்பதை உறுதியாக தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *