இரணைதீவு மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு எமது புலம்பெயர் தமிழர்கள் உதவி வருகின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண,
கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துளார்.
கிளிநொச்சி பூநகரி இரணைதீவு பிரதேசத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கான உலர் உணவுப் பொருள்களை நேற்று வியாழக்கிழமை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இரணைதீவுப் பகுதியில் தங்கியிருக்கின்ற மக்களுக்கென கனடா நாட்டில் வசிக்கும் சிறி என அழைக்கப்படும் சின்னத்துரை சண்முகலிங்கம் என்பவரால் வழங்கி வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் இரணைமாதா நகர் இறங்குதுறையில் வைத்து பங்குத் தந்தையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கனடாவின் மொன்றியல் நகரில் புறுட் கபே என்ற ஸ்தாபனத்தை நடத்தி வருகின்ற அதன் உரிமையாளரான சிறி என அழைக்கப்படும் சின்னத்துரை சண்முகலிங்கம் கிளிநொச்சி
மாவட்டத்தில் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றார். இரணைதீவுப் பகுதியிலுள்ள மக்களுக்கு உரிய உணவுப் பொருட்களை
பங்குத்தந்தை ஊடாக அவர் வழங்கியிருக்கின்றார். அண்மையில் கூட போரால் பாதிக்கப்பட்ட 12 முன்னாள் போராளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான உதவிகளையும் வழங்கியிருக்கின்றார்.
நிலத் தொடர்புகளுடன் இருக்கின்ற மக்களைவிட நிலத் தொடர்புகள் இல்லாத இர
ணைதீவு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து அவர்கள் பல்வேறு போராட்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.இந்த மக்கள் இன்று தங்களுடைய சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ முடியாமலும் சொந்தக் கடலில் தொழில் செய்ய முடியாத ஒரு நிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் கல்வியமைச்சர் த.குருகுலராசா, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர் கஜன், பூநகரி பிரதேச சபைஉறுப்பினர் எமிலியாம் பிள்ளை மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.