நாட்டில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்;சுதந்திர ஊடக இயக்கம் கடும் விசனம்

சுயாதீன ஊடகவியலாளரான சுஜீவ கமகே கடத்தப்பட்டதுடன் சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை  ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவமாக சுதந்திர ஊடக இயக்கம் கருதுவதுடன், இது தொடர்பில் அரசாங்கம் உடனடி விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மைத் தகவலை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்   அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் அழைப்பாளர் சீதா ரஞ்சனி,செயலாளர் லசந்த டி சில்வா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சுஜீவ கமகே கூறிய விடயங்கள் மற்றும் அறிக்கையிடப்பட்டுள்ளமைக்கு அமைய அவர் மீரிகம நகரத்தில் வைத்தே கடத்தப்பட்டுள்ளார். ஒரு கறுப்பு நிற ஜீப்பில் அவரை ஏற்றிக்கொண்டு ,முகத்தை கறுப்பு நிறப் பையால் மூடி, வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன் அடித்து விசாரித்ததாகவும்  சூடேற்றப்பட்ட இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்டும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

அவரிடம் உள்ள சர்ச்சைக்குரிய தகவல்களைக்கொண்ட தரவு அட்டையைக் கோரி சித்திரவதை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.அவரது வீட்டிலிருந்த இரு பென் டிரைவ்கள் மற்றும் குறித்த தரவு அட்டையைப்பெற்றுக்கொண்ட பின்னர் அவரை வெல்லம்பிட்டி பகுதியில் விடுவித்ததாகக் கூறப்படுகின்றது.

தற்போது தனக்குச் சொந்தமான வார இதழ் பதிப்பகத்தில் கடமை புரியும் சுஜீவ கமகே என்பவர் மேலும் வேறு சில வெளியீடுகள் தொடர்பில் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றியுள்ளார். அவரிடம் காணப்பட்ட சர்ச்சைக்குரிய தரவு அட்டையை விசாரிப்பதற்கு நாடியிருந்தால் சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு ஈடுபடாமையானது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

இந்தக் கடத்தல் சம்பவமானது மார்ச் 10 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.சுஜீவ கமகே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விடயம் அறியக் கிடைத்தது மார்ச் 15 ஆம் திகதி ஆகும். குறித்த சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்ற விசாரணைப்

பிரிவினர் மேற்கொள்வதாக அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடனடியாக இது தொடர்பில் விசாரணை நடத்தி, எந்தக் காரணத்துக்காக இக்கடத்தல் சம்பவம் நடைபெற்றது? யாரால் கடத்தப்பட்டார்? போன்ற தகவல்களை வெளியிடுமாறு பொலிஸ்மா அதிபரிடம் ,சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்ளுவதுடன் , ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பில் தகுந்த கவனம் செலுத்துமாறும் வலியுறுத்துகின்றது

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *