அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபொலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் பிளாய்ட். லொரிச்சாரதியான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25ம் திகதி மினியாபொலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினார். அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டொலர் கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் பொலிஸிற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் தலைமையில் 4 பொலிசார் அங்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் முறைப்பாடு தொடர்பாக விசாரிக்க அழைத்தபோது பிளாய்ட் பொலிஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் ஜோர்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை முழங்காலால் அழுத்தினார். என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள் என ஜோர்ஜ் பிளாய்ட் கெஞ்சிய போதும் விடவில்லை. சிறிது நேரத்தில் ஜோர்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார்.
ஜோர்ஜ் பிளாய்ட் கழுத்தில் பொலிஸ் அதிகாரி முழங்கால் வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனைத் தொடர்ந்து ஜோர்ஜ் பிளாய்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கின.
இதற்கிடையே ஜோர்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 பொலிஸார் மற்றும் மினியாபொலிஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதையடுத்து டெரிக் சாவின் உள்பட 4 பொலிசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதில் டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றில் கடந்த வாரம் தொடங்கியது. அப்போது குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த டெரிக் சாவின் தனது பொலிஸ் பயிற்சியை முறையாக பின்பற்றியதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் டெரிக் சாவின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 65 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஜோர்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் மினியாபொலிஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஜோர்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு 27 மில்லியன் டொலர் நிவாரணமாக வழங்க மினியாபொலீஸ் நகர அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இது குறித்து ஜோர்ஜ் பிளாய்ட் குடும்பத்தின் சட்டத்தரணி பெஞ்சமீன் கிரம்ப் கூறுகையில், “அமெரிக்க வரலாற்றில் ஒரு தவறான மரணத்துக்கான வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒதுக்கப்படும் மிகப்பெரிய நிவாரணம் இது” என்றார்.
ஜோர்ஜ் பிளாய்டின் சகோதரி பிரிட்ஜெட் பிளாய்ட் கூறுகையில், “எனது சகோதரர் ஜோர்ஜ் பிளாய்டின் நீதிக்கான பயணத்தின் இந்தப் பகுதி சுமுகமாக தீர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்தா
Reported by : Sisil.L