உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எங்களால் தடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கத் தயாராகவுள்ளேன் எனத் தெரிவித்துள்ள இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என மக்கள் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்காக வெளிப்படையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என்பது மக்கள் கருத்து எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர், இது என்னால் உருவாக்கப்பட்ட கதையில்லை. இந்த நாட்டின் பொதுவான மக்களின் கருத்து எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக வெளிப்படையான விசாரணையே இந்த நேரத்தில் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவா்களுக்கும் மரண தண்டனையை விதிக்க வேண்டும் என்பதே எனது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ள அவர் இதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும், எனது இந்தக் கருத்துக்காக சிலர் என்னை எதிர்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L