மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு; 18 பேர் பலி

மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து மக்களால் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது.

தலைவி ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி மியான்மர் இராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால் மியான்மர் மக்கள் இராணுவ ஆட்சியை

ஏற்றுக் கொள்ளவில்லை. நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த சில வாரங்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

மியான்மர் ராணுவம் இந்தப் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.  ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது பல்வேறு இடங்களில்  பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 18 பேர் வரை உயிரிழந்ததாக ஐ.நா. மனித உரிமை பேரவை தெரிவித்துள்ளது. யங்கூன், தாவெய், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஅதேசமயம் இராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மரில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேபோல் மியான்மர் மக்களுக்கான சர்வதேச நாடுகளின் ஆதரவும் தொடர்ந்து பெருகி வருகிறது. இது மியான்மர் இராணுவத்துக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.இதனால் இராணுவத்தினர் மேலும் ஆக்ரோஷத்துடன் போராட்டத்தை ஒடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு ஆளும் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள்‌ உள்பட 800க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *