யாழ்.மண்டைதீவில் பொலிஸ் காவலரண் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியிலுள்ள பொலிஸ் காவலரண் அமைந்துள்ள காணி மீது நேற்றிரவு(10) பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், இதனால் காவலரணுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

04 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதுடன் அதில் ஒன்று வீதியிலும் ஏனைய 3  குண்டுகள் பொலிஸ் காவலரண் அமைந்துள்ள காணி மீதும் வீழ்ந்துள்ளன.

இவற்றில் ஒன்று மாத்திரமே தீப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பின் போது 1,200 மில்லிகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச்சென்ற போது, மண்டைதீவு பொலிஸ் உத்தியோகத்தரை குறித்த சந்தேகநபர் அச்சுறுத்தியுள்ளார்.

இந்த விடயங்களை மன்றில் முன்வைத்த நிலையில் குறித்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அப்பகுதியில் நேற்றிரவு(10) வீதித்தடை இடப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது பொலிஸ் காவலரண் அமைந்துள்ள பகுதியில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் இருவர் 2 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய மேலும் நால்வர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞரின் சகோதரர் மற்றும் அவரது குழுவினரே பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Reported by: S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *