தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கலந்துரையாடலுக்கு அனுமதி கோரி இன்று (17) பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகே சென்றனர்.
பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவருடன் கலந்துரையாடுவதற்கு அவர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அறிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்று பகல் பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் சுமார் 200 உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகே சென்று, ஜனாதிபதி , ஜனாதிபதியின் செயலாளர் அல்லது பொறுப்புக்கூற வேண்டிய ஒருவரிடம் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
எனினும், ஜனாதிபதி செயலகத்தை நெருங்குவதற்குக்கூட அவர்களுக்கு பொலிஸார் இடமளிக்கவில்லை.
பின்னர், ஜனாதிபதி செயலகத்திலிருந்து அதிகாரியொருவர் வருகை தந்து தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
எனினும், ஜனாதிபதி செயலாளருடன் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு இல்லை என அந்த அதிகாரி அறிவித்தார்.
இதனையடுத்து, தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் , பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம், மருத்துவ பீட விரிவுரையாளர்களின் சம்மேளனம் , இலங்கை வங்கி சேவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
Reported by:S.Kumara