இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்திருக்கும் மிரட்டலுக்குத் தமிழ் மக்கள் அஞ்சத் தேவையில்லை. அது சட்ட விரோதமான அச்சுறுத்தல்” – எம்.ஏ.சுமந்திரன்

போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்றையதினம் ஊடகங்களுக்கு செய்தி வழங்கியிருந்தார்.
இந்நிலையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா  விடுத்திருக்கும் மிரட்டலுக்குத் தமிழ் மக்கள் அஞ்சத் தேவையில்லை. அது சட்ட விரோதமான அச்சுறுத்தல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த விடயம் தொடர்பில் நான் நாடாளுமன்றத்திலேயே கேள்வி எழுப்பினேன். தமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தவதில் கூட தமிழர்களுக்கு எதிராகப் பாகுபாடு,பாரபட்சம் காட்டப்படுகின்றது. ஜே.வி.பியின் தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு அஞ்சலி செலுத்த சிங்கள மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், தமிழ் உறவுகள் அதனைச் செய்ய அனுமதிக்கின்றார்கள் இல்லை என்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினேன்.
கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளைக் காட்டி நினைவேந்தலைத் தடுக்க முனையும் கீழ்த்தரமான முயற்சியில் ஈடுபடாதீர்கள் என நாடாளுமன்ற உரையில் அரசுத் தரப்பை நான் கோரினேன்.
எனது உரைக்குப் பதில் கூற அரசுத் தரப்பில் எவரும் தயார் இல்லை. ஆனால், இப்போது இராணுவத் தளபதி தமிழ் மக்களை அச்சுறுத்துகின்றார். அதுவும் சட்ட விரோதமான முறையில் மிரட்டுகின்றார். தமிழ் மக்கள் தங்கள் உறவுகளை நினைவுகூர முடியும். அதற்கு அவர்களுக்கு சட்ட ரீதியான உரிமை உண்டு. அதைத் தடுக்க முடியாது.
கொரோனா தொடர்பான விதிமுறைகளை மீறாமல், சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைப் பேணி, உரிய சுகாதாரப் பாதுகாப்போடு விடயங்களை முன்னெடுத்தால், தனிமைப்படுத்தல் சட்டம் மக்கள் மீது பாயமுடியாது.
தன்னிஷ்டப்படி யாரும் சுகாதார விதிமுறைகளை வியாக்கியானம் செய்ய முடியாது. அந்த விதிமுறைகளை மீறாத வரையில், யாரையும் தனிமைப்படுத்துவோம் என்று யாரும் எச்சரிக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது. அந்த அச்சுறுத்தலை இராணுவத் தளபதியும் விடுக்க முடியாது. அப்படி விடுத்தால் அது சட்டவிரோத அச்சுறுத்தல். சட்டத்தைத் தவறாகக் கையாளும் அத்துமீறல் நடவடிக்கை. ஆகவே, சுகாதார விதிமுறைப்படி ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு அமைய சமூக இடைவெளியைப் பின்பற்றி பிற சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கைக்கொண்டபடி, நமது உறவுகளுக்கு நாம் அஞ்சலி செலுத்தலாம்.
சுகாதார விதிமுறைகளைத் தத்தமது அரசியல் தேவைகளுக்கேற்ப தவறாகப் பயன்படுத்த முயலும் சக்திகளை நாம் அடையாளம் கண்டு, ஆதாரத்துடன் நீதிமன்றங்களுக்கும் கொண்டு செல்ல முடியும்” என தெரிவித்துள்ளார் .

இந்த நாட்டில் தமிழர்கள் நாங்கள் அடிமைகளாக வாழ்வதையிட்டு மனவேதனை கொள்கின்றோம். அந்த நிலைமை மாற வேண்டும்” – பா.உறுப்பினர் தவராசா கலையரசன்

இந்த நாட்டில் தமிழர்கள் நாங்கள் அடிமைகளாக வாழ்வதையிட்டு மனவேதனை கொள்கின்றோம். அந்த நிலைமை மாற வேண்டும். அதற்கான மாற்றங்களை நாமே முன்னெடுக்க வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று (16.11.2020) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் எமது பாதிக்கப்பட்ட போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவிகள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு எமது பணிகளை முன்னெடுக்க இருக்கின்றோம். எதிர்காலத்தில் எத்தகைய செயற்திட்டங்களை மேற்கொண்டால் எமது வாழ்வாதாரம் நீடித்து நிலைத்திருக்கும் என்பது தொடர்பில் அவர்களுடனேயே கலந்துரையாடி இச்செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம்.

நாங்கள் கடந்த காலங்களில் இவ்வாறான பல செயற்பாடுகளை மேற்கொண்டோம். ஆனால் பலரின் ஒத்துழைப்பின்மையால் அச்செயற்பாடுகளை தொடந்தேர்ச்சியாக முன்னெடுக்க முடியமால் போயுள்ளது. அவ்வாறில்லாமல் எதிர்வரும் காலங்களில எமது செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லக் கூடியதாக அமைய வேண்டும்.

பாராளுமன்றம் சென்றதில் இருந்து இதுவரையில் எவ்விதமான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்வதற்கான நிதிநிலைமைகள் எமக்குக் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் நாங்கள் அதனை மாத்திரம் பார்த்திராமல் எமது மக்களுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எமது முயற்சியின் மூலம் கிடைக்கும் வளங்களைக் கொண்டு எமது மக்களுக்கான பணிகளை மேற்கொள்கின்றோம்.

இந்த நாட்டில் நாங்கள் அடிமைகளாக வாழ்வதையிட்டு மனவேதனை கொள்கின்றோம். அந்த நிலைமை மாற வேண்டும். அதற்கான மாற்றங்களை நாமே முன்னெடுக்க வேண்டும். அதற்கான ஆரம்பமே இந்த செயற்பாடுகள். எதிர்வருகின்ற காலங்களில் இந்த மாவட்டத்தில் எமது மக்களுக்கு எற்படுகின்ற பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் நானும் எமது தலைமைகள் ஊடாகவும் அரசியற் தலைவர்கள் மற்றும் சர்வதேசம் வரை கொண்டு செல்வதற்கும் தயாராக இருக்கின்றோம். எதற்கும் நாம் தயங்க மாட்டோம்.

நாங்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்களை எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன் அணுகவில்லை. தற்போது  எமக்காகப் பலர் குரல் கொடுக்க வருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவுமே செய்யவில்லை நாங்கள் செய்யப் போகின்றோம் என்று சொல்லி ஒரு போலியான முகவரியுடன் பலர் பேசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களால் எமது பிரச்சினை தொடர்பில் எதுவுமே சாதிக்க முடியாது. இதனை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் எமது மக்கள் நிறையவே அனுபவங்களைப் பெற்றவர்கள்.

எமது முன்னாள் போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பப் பெண்கள் போன்றோர் எமது சமூகம் சார்ந்த விடயங்களில் மக்களுக்கு உபதேசம் பண்ண வேண்டியவர்களாவர். எம்மை ஏமாற்றுகின்ற ஏமாளிகள் எமது பிரதேசங்களிலே வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தேர்தலிலே அவர்களுடைய ஏமாற்று வித்தைகள் எம் மக்கள் மத்தியிலே ஓரளவு பலித்திருந்தது. அது எங்களுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நாங்கள் ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கின்றோம். எனவே அவ்வாறான விடயங்களுக்குப் பின்னால் எமது மக்கள் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் செல்வதை விடுத்து எமது தேசியப் பயணத்தோடு பயணிக்க வேண்டும்.

நாங்கள் யாரையும் அடக்கி ஒடுக்கி அதிகாரத்தைப் பறிப்பவர்கள் அல்ல. நாங்கள் அதிகாரமுள்ள ஒரு சமத்துவமான இனம். எங்களுக்குள்ள அதிகாரத்தையே நாங்கள் கேட்கின்றோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *