இந்தியாவிலிருந்து கனடா வருவோர்  படும் பாடு ; 3ஆவது நாட்டில் கொரோனா பரிசோதனை கட்டாயம்

நேரடி விமானம் ரத்து

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் நேரடி விமான சேவையை கனடா ரத்து செய்துள்ளது. கனடாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கச் செல்கிற இந்திய மாணவர்கள், இணைப்பு விமானங்களில் செல்கிற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மூன்றாவது நாட்டில் ஆர்.டி.பி.சி.ஆர். (கொரோனா மாதிரி பரிசோதனை) செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. கனடாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாட்டில்தான் இந்தச் சோதனையைச் செய்து கொள்ள வேண்டும்.

இந்திய ரூபா 5 லட்சம் செலவு
இந்தியாவிலிருந்து துபாய்க்கு ஒரு விமானம், அடுத்த விமானத்தை ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அங்கிருந்து மெக்சிகோ போக வேண்டும். அங்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொண்டுதான் கனடாவின் வன்கூவர் நகருக்குப் போக முடியும். இதனால் கனடா செல்வதற்கு சுற்றுலா போல பல நாடுகளைக் கடந்து செல்லவேண்டிய பரிதாபம் ஏற்பட்டுள்ளது. இந்திய ரூபா 1.5 லட்சத்தில் முடிய வேண்டிய கனடா பயணத்துக்கு ரூ.5 லட்சம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

மாணவியின் தாயார் வேதனை
இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்திய மாணவி லரீனா குமார் தாயார் லவ்லி குமார், செய்தி நிறுவனம் ஒன்றிடம் வேதனையுடன் கூறுகையில்,
“என் மகளை கனடாவில் குடியேற்றுவதற்கு உதவும் விதத்தில் அவளுடன் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் அனைத்து திட்டங்களும் பாதிக்கப்பட்டு விட்டன. என் மகள் முதல் முறையாக தனியாகச் செல்வதுடன், 4 நாடுகள் கடந்து போக வேண்டியிருக்கிறது. அவள் தலையில் கத்தி தொங்குகிறது. எந்த நிமிடத்திலும் விதிமுறைகளை அரசுகள் மாற்றலாமே…
தோஹாவுக்கு முதலில் டிக்கெட் பதிவு செய்தோம். பின்னர் அங்கு விதிமுறை மாறியது. ஓரளவு பணம்கூட திரும்பப்பெற வாய்ப்பில்லை. பணத்தைத் திருப்பித்தரும் திட்டம் கொண்ட ஹோட்டல்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. எனவே ரூ.1.5 லட்சத்தில் முடிய வேண்டிய கனடா பயணத்துக்கு ரூ.5 லட்சம் வரை ஆகிறது. இத்துடன் மன அழுத்தமும் ஏற்பட்டு விடுகிறது” என்றார்.இவரது மகள் லரீனா, கனடா எமிலி கார் பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு கலை மற்றும் வடிவமைப்பு இளங்கலை மாணவி ஆவார்.

 
நீடிப்பு
இங்கிலாந்து, உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், இந்தியாவின் கொரோனா நிலவரத்தைக் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளன. ஆனால் கனடா அடுத்த மாதம் 21-ஆம் திகதி வரை இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவை ரத்தை நீடித்துள்ளது. லரீனா போன்ற பலரும் கனடா செல்ல அவஸ்தைகளை அனுபவிப்பதாகச் சொல்வது பரிதாபமாக உள்ளது.
————————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *