க்ளோயி சாவ் என்கிற சீனப் பெண் இயக்கிய ‘நோ மேட்லாண்ட்’ திரைப்படம் அதிகபட்சமாக மூன்று ஒஸ்கார் விருதுகளை வென்றது.
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஒஸ்கார் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் 93-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது.
விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விழா நடந்தது.
இதில் க்ளோயி சாவ் என்கிற சீனப் பெண் இயக்கிய ‘நோ மேட்லாண்ட்’ திரைப்படம் மூன்று ஒஸ்கார் விருதுகளை வென்றது. சிறந்த படத்திற்கான ஒஸ்கார் விருது ‘நோ மேட்லாண்ட்’ படத்துக்குக் கிடைத்தது. மேலும் இப்படத்தின் நாயகி பிரான்சஸ் மெக்டார்மண்டுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், இப்படத்தை இயக்கிய க்ளோயி சாவ்விற்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்தது.
ஒஸ்கார் வரலாற்றில் சிறந்த பெண் இயக்குனருக்கான ஒஸ்கார் விருதைப் பெறும் இரண்டாவது பெண் க்ளோயி சாவ் ஆவார். இதற்கு முன் கடந்த 2010ஆம் ஆண்டு கேத்ரின் பிக்லோ என்பவர் ‘தி ஹர்ட் லாக்கர்’ என்ற படத்திற்காக வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L