சர்வதேச அளவில் ஒஸ்காருக்கு அடுத்தபடியாக கௌரவமிக்க விருதாகக் கருதப்படுவது பிரிட்டிஷ் அகாடமியின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் (பாப்டா) ஆகும்.
இந்த நிலையில் 74ஆவது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இதில் ‘நோமட்லேண்ட்’ என்கிற அமெரிக்கப் படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்த 63 வயதான பிரான்சிஸ் மெக்டார்மண்டுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
அதேபோல் ‘நோமட்லேண்ட்’ படத்தை இயக்கிய பெண் இயக்குனர் கோலே ஜாவோவுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது. இது தவிர சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும் இந்தப் படம் தட்டிச்சென்றது. ‘தி பாதர்’ என்ற படத்தில் நடித்ததற்காக பழம்பெரும் நடிகர் ஆண்டனி ஹாப்கின்சுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் இந்தியத் திரைப்படமான ‘தி வைட் டைகர்’ படத்தில் நடித்ததற்காக பொலிவூட் நடிகர் ஆதர்ஷ் கவ்ரவ் பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த துணை நடிகைக்கான விருது ‘மினாரி’ என்ற அமெரிக்கப் படத்தில் பாட்டியாக நடித்த தென் கொரியாவின் மூத்த நட்சத்திரமான யு-ஜங் யூனுக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது ‘யூடாஸ் அண்ட் தி பிளாக் மேசியா’ என்ற படத்துக்காக டேனியல் கலுயாவுக்கும் வழங்கப்பட்டன
Reported by : Sisil.L