ஒப்பந்த அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) அனைத்து ஊழியர்களும் நிரந்தரமாக்கப்படுவர் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் அவர் உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார்.
சாரதி பயிற்றுநர்களுக்கு தற்போதுள்ள வெற்றிடங்களை நிரப்ப மே மாதம் இது தொடர்பான பரீட்சை நடத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார். குறைந்த வருமானம் பெறுவோரில் தகுதிவாய்ந்தவர்கள் உடனடியாக சாரதி மற்றும் நடத்துனர் பதவிகளுக்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டிய அவசியம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் பேருந்து சாரதிகளுக்கு சிறப்பு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அமைச்சு தற்போது விவாதித்து வருகிறது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.