30 வருட போரில் உயிரிழந்தோரை நினைவுகூர அரசு அனுமதிக்க வேண்டும்: யாழ்.மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகள்

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதைப் போல, 30 வருட யுத்தத்தின்போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்கள் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின்போது வடபகுதியில் எத்தனை ஆலயங்கள் குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டன, எத்தனையோ மக்கள் இறந்தார்கள். தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தவேளையில் தென் பகுதியில் இருந்து யாரும் எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிச்சயமாக இருக்கின்றது.
அது உண்மைதான். இப்படியான ஒரு நிலையில் தென் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு நாங்கள் ஏன் நினைவு நிகழ்வுகளைச் செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி பலரிடையே நிச்சயமாக இருக்கின்றது. ஆனால், சரியான ஒரு காரியத்தை ஒருவர் செய்யவில்லை என்பதற்காக சரியான ஒரு காரியத்தை நாங்கள் செய்யாமல் இருக்கக் கூடாது.

ஆண்டவர் இயேசு சொல்கிறார் -“பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ
அவற்றை எல்லாம் நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்று. அதேபோல் அவர்களுடைய துன்ப வேளைகளில் எங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டியது கிறிஸ்தவ மக்களின் கடமையாகும். ஆகவே நாளைய தினத்தில் (இன்று) இந்த அஞ்சலி நிகழ்வுகளை நாங்கள் செய்து எங்கள் ஆதரவையும் அஞ்சலிகளையும் செலுத்துவதற்கு முன்வருவோம்.

இந்த வேளையிலே அரசாங்கத்திடம் நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றோம். இந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்வதற்கு அனுமதி வழங்கி அதற்கான பாதுகாப்புகளை நீங்கள் கொடுக்கிறீர்கள்.


அதற்காக நாங்கள் நன்றி சொல்கின்றோம். இதேபோல தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் 30 ஆண்டுகளாக அனுபவித்த போரின்பொழுது இறந்து போன ஆயிரக்கணக்கான மக்கள், இறந்துபோன இளைஞர், யுவதிகளையும்
நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த எங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்றார்

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *