கடந்த வருடம் சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் எல்லா பகுதிகளிலும் பரவ ஆரம்பித்து பாரிய இடரினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கொரோனா வைரஸை சீனா வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டதாக கூறியிருந்தது.
இந்நிலையில் உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. தடுப்பூசி தயாரித்து சந்தையிடுவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
மருந்து என்ற விடயத்துக்கப்பால் நாடுகள் தம்முடைய பலத்தை பரிசீலிக்கும் களமாக கொரோனா மருந்து கண்டுபிடிப்பு மாறியுள்ளது.
இந்த போட்டிக்களத்தில் சீனா உத்வேகமாக களமிறங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது அங்கு 4 நிறுவனங்கள் சார்பில் 5 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை ரஷியா, எகிப்து, மெக்சிகோ உள்பட 12-க்கு மேற்பட்ட நாடுகளில் பரிசோதிக்கப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளை விரைவில் வெளியிட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. மாகாண அரசாங்கங்கள் தடுப்பூசிகளுக்காக ஆர்டர்களை குவித்து வருகின்றன.
இருப்பினும் சுகாதார அதிகாரிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றோ, நாட்டின் 140 கோடி மக்களை எவ்வாறு சென்று அடையப்போகிறார்கள் என்றோ கூறப்படவில்லை. இதற்கிடையே ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி, கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை உருவாக்கியவர்கள் சோதனைகளை விரைவுபடுத்துகின்றனர் என்று கூறினார்.