ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல்; இஸ்ரேலில் தாதியாகப் பணியாற்றிய கேரளப் பெண் பலி

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமிலுள்ள அல் அக்‌ஷா வழிபாட்டுத் தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது  நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.
இதற்கு இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.

 இதனைத் தொடர்ந்து நேற்று முழுவதும் இரு தரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே, காசா முனைப் பகுதியில் இருந்த 13 மாடி கட்டிடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. காசா டவர் என்று அழைக்கப்படும் அந்தக் கட்டிடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகமாகச் செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக அந்தக் கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், காசா டவர் கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய நகரங்களைக் குறிவைத்து ஹமாஸ் அமைப்பு 130 ரொக்கெட்டுகளை ஏவியது.

இந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவை இஸ்ரேலிய ஏவுகணை தடுப்பு அமைப்பால் தடுக்கப்பட்டது. ஆனால், சில ஏவுகணைகள் இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற நகரங்களில் விழுந்தன. இதில் பேருந்து, வாகனங்கள், கட்டிடங்கள் தீக்கிரையாகின. ஆனாலும், ஹமாஸ் அமைப்பு நடத்திய ரொக்கெட் தாக்குதலில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பெண்ணும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கஞ்ச்குஷி பஞ்சாயத்தை சேர்ந்த 31 வயது சௌமியா  இஸ்ரேலின் அஷ்கிலான் நகரில் தாதியாகப் பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று இரவு அஷ்கிலான் நகரில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து கேரளாவில் உள்ள தனது கணவரிடம் தொலைபேசியில் வீடியோ அழைப்பு மூலம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் ஒரு ரொக்கெட் சௌமியா தங்கியிருந்த வீட்டின் மீது விழுந்து வெடித்தது. இந்தத் தாக்குதலில் சௌமியா படுகாயமடைந்தார். வீடியோ அழைப்பில்  பேசிக்கொண்டிருந்த அவரது கணவர் சந்தோஷ்க்கு சௌமியாவின் அலறல் சத்தம் கேட்டு பின்னர் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து அஷ்கிலான் நகரில் பணியாற்றி வந்த சௌமியாவின் உறவினர் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு உடனடியாகச் சென்று பார்த்துள்ளார். அங்கு ஏவுகணைத் தாக்குதலில் கட்டிடம் இடிந்து விழுந்து சௌமியா உயிரிழந்துள்ளார் என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

10 ஆண்டுகளாக இஸ்ரேலில்  தாதியாகப் பணியாற்றிவந்த சௌமியாவுக்கு 10 வயதில் மகன் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவிற்கு வந்து குடும்பத்தினரை சந்தித்துவிட்டு இஸ்ரேல் சென்ற சௌமியா வரும் ஜூலை மாதம் மீண்டும் சொந்த ஊரான கேரளா வரத் திட்டமிட்டிருந்தார்.

ஹமாஸ் தாக்குதலில் சௌமியா உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் தாக்குதலில் இந்தியர் உயிரிழந்த சம்பவத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *