பன்றிகளிடையே பரவி வரும் வைரஸானது மேல் மாகாணத்திலுள்ள 4 பண்ணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
நோய் தொற்று காணப்படும் பண்ணைகளில் இருந்து பன்றிகளை வெளியே கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் K.K.சரத் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் தொற்று இதற்கு முன்னரும் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் இது வேகமாக பரவும் அபாயம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவாது என மேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் பன்றிகளை உடனடியாக கால்நடை மருத்துவரிடம் காண்பிக்குமாறும் பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் நோய்க்கு தடுப்பூசி தேவையான போதிலும் குறித்த தடுப்பூசிகள் தற்போது நாட்டில் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் K.K.சரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
Reported by:Maria.S