வட்டுவாகலில் கைக்குண்டு வெடித்து இளைஞர் பலி; ஒருவர் படுகாயம்

வட்டுவாகல் பாலம் அருகே கடற்படை முகாமுக்கு முன்னுள்ள காணியில் வெடிபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலியானார். மற்றோர் இளைஞர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவு செல்வபுரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் நிஷாந்த் (வயது 19) என்பவரே உயிரிழந்தார். அவருடன் சென்றவரான செல்வகுமார் சாந்தரூபன் (வயது 20) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இருவரும் நுங்கு வெட்டுவதற்காக வட்டுவாகல் பகுதிக்குச் சென்றிருந்தனர்.
கடற்படைக் காணியின் முன்பாக அங்கு நின்றிருந்தபோது வெடிபொருள் வெடித்துள்ளது.

வெடிச் சத்தம் கேட்டு அங்கு விரைந்த கடற்படையினர் இருவரையும் மீட்டு உடனடியாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு ஒருவர் மரணமானார். மற்றவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இருவரும் வயிறு மற்றும் அதனை அண்மித்த பாகங்களில் கடும் காயங்களுக்கு உள்ளாகினர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் நடத்தி வருகின்றனர். கைக்குண்டு ஒன்றே வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *