வடமராட்சி கிழக்குப் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டோர் மீது பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் இன்று நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சட்ட விரோத மணல் கடத்தலைத் தடுக்கும் வகையில் வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது சட்டவிரோத மணல் ஏற்றி வரும் வாகனங்கள் தப்பிச் செல்ல முடியாதவாறு ஆணிகள் இறுக்கப்பட்ட கட்டைகள் வீதியில் போடப்பட்டிருந்தன. மணல் ஏற்றி வந்த வாகனத்தை பொலிஸார் மறித்த போது, அதனை ஓட்டி வந்தவர்கள் நிறுத்தாமல், ஆணிக்கட்டைகள் மீது ஏற்றி தப்பிச் செல்ல முயன்ற போது, அவர்கள் மீது அதிரடிப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அதன் போது வாகனத்தில் இருந்த துன்னாலை பகுதியைச் சேர்ந்த இருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Reported by : Sisil.L