வடக்கு,கிழக்கு மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குங்கள் இந்தியாவை கோருகிறார் விக்னேஸ்வரன் எம்.பி.

வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை இந்திய அரசாங்கம் சாத்தியமானளவு வழங்கி உதவ வேண்டும் என்று கோரி அவசரக் கடிதம் ஒன்றை இந்திய உயர்ஸ்தானிகருக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வகையில் அதிகளவிலான கொவிட் -19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில்  கொவிட் தடுப்பு ஊசிகள் மிக அவசரமாக எமது வட,கிழக்கு மக்களுக்கு தேவையாக உள்ளன. இந்த  ஆபத்தான நிலைமை பற்றி யாழ். இந்தியத் துணை தூதரகமும் நன்றாக அறிந்திருக்கும்.

இந்நிலையில் இலங்கை அரசால் தருவிக்கப்பட உள்ள சீன தடுப்பு ஊசிகளில் எவ்வளவு எம் மக்களுக்கு கிடைக்கும் என்று தெரியாது. இலங்கை அரசாங்கமும் இந்திய மத்திய அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனாலும் தடுப்பு ஊசிகள் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை பற்றியும் நாம் அவதானித்துள்ளோம். எனினும் வடக்கு,கிழக்கு வாழ் மக்கள் எதிர்கொள்ளும் இந்த ஆபத்தான நிலைமையில் இந்திய அரசின் சாத்தியமானளவு உதவிகளை பற்றாக்குறையாக உள்ள தடுப்பு ஊசிகள் சம்பந்தமாக எதிர்பார்த்துள்ளார்கள்.
தங்களிடமிருந்து சாதகமான பதிலை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கின்றோம் – என்றுள்ளது.
——————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *