யாழ்.மாநகர முதல்வர் கைது; விடுவிக்கக் கோரி செல்வம் எம்.பி. அறிக்கை

இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிக்கை ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது;

குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட  யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

தமிழர்களின் நிர்வாகத் திறமையை சகித்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்  உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அதே நேரம் யாழ். மாநகரை  சுத்தப்படுத்தும் நோக்கில் உருவாக்கிய  காவல் படையை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.

இத்தனை வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த அரசினால் ஒரு மாநகர சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் செயற்பாட்டை  செய்ய முடியவில்லை.

அதனை ஒரு தமிழன் செய்து விட்டான் என்ற காழ்ப்புணர்ச்சியில் இந்தக் கைது நாடகம் அரங்கேறியுள்ளது.

சீருடை காரணமாக யாழ். மாநகர காவல் படையை தடைசெய்து முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனைக் கைது செய்துள்ளமை சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

யாழ். மாநகர காவல் படையினரின் இதே வகையிலான சீருடை கொழும்பு மாநகர சபையிலும் உள்ளதாக மணிவண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

அவ்வாறு விளக்கமளித்தும் மணிவண்ணனைக் கைது செய்திருப்பது இந்த அரசு தமிழர்கள் எந்த வகையிலும் முன்னேறி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

சாதாரண சீருடையைப் பார்த்து அரசாங்கம்  அச்சம் கொள்வது எதற்காக என்று எமக்குத் தெரியவில்லை. எனவே கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்வதோடு யாழ். நகரை சுத்தப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாநகர காவல் படையை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்த வேளையில் கேட்டுக்கொள்கின்றேன்

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *