மே 18ஐ இனப்படுகொலை நாளாகவும் செப நாளாகவும் அனுஷ்டிக்க வட,கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு

வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத்தால் மே மாதம் 18ஆம் திகதி குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.போரில் பலியானோரை நினைவுகூரும் தினம் என்று குறிப்பிடப் பட்டு வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கி. நோயல் இம்மானுவேல், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.

அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:-
“மே மாதம் 18ஆம் திகதி இலங்கையின் வடக்கு – கிழக்கு வாழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்டு நிறைவாகும். இறுதிப் போரின்போது பலி
யானவர்களுக்கு இறுதிக்கிரிகைகள்கூட செய்ய முடியாது புதைத்துவிட்டு தப்பிப் பிழைத்து வந்தவர்களும், அதற்குச் சாட்சிகளாக இருக்கும் ஏனையவர்களும் பலியானவர்களைக் கண்ணீரோடு நினைவுகூரும் நாளாகும். இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையுடைய நாளாகவும் அந்நாள் இருக்கின்றது. படுகொலை செய்யப்பட்டவர்கள் அனுபவித்த வேதனைகளும் துன்பங்களும் விடுதலை வாழ்வுக்குத் தொடர்ந்து பங்களிப்புச் செய்கின்றன.


இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு – கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ஆம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக வடக்கு  -கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்ற போரிலும் குழப்பங்களிலும் தமது உயிர்களை இழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து செபிக்கும்படியாகவும் கேட்டுநிற்கின்றோம்.

அனைத்துப் பங்குத் தந்தையர்களையும், துறவறக் குழுமங்களையும்,மத நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர்களையும் கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 எதிர்வரும் மே 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மூவேளை செப மணியோசை எழுப்புதல், மக்களைச் செபிக்க அழைத்தல், ஈகைச் சுடர் ஏற்றுதல்,
 இரண்டு நிமிட அக வணக்கம்,இறந்தோர், பாதிக்கப்பட்டோர், துன்புறுவோரை நினைத்து மௌன செபம், மாலை 6.15 – இறந்தோரை நினைவுகூர்ந்து துக்க மணி ஒலித்தல்
இவ்வேளையில் மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தவாறு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செய்யவும் செபிக்கவும் அறிவுறுத்தவும்”  என்றுள்ளது.
—————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *