உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு தற்போது மொடர்னா மற்றும் பைசர்/பையோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 115,730,008 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இதற்கிடையில் அமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் மாத இறுதியில் சுமார் 3 கோடி அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அமெரிக்காவில் தற்போது அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படவில்லை.இதனால் அமெரிக்காவில் மிகையாக தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு பகிர்ந்து கொடுக்க சர்வதேச அளவில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுக்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி மெக்சிகோ நாட்டுக்கு 25 லட்சம் தடுப்பூசிகளும், கனடாவிற்கு 15 லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்பட உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசிகளுக்கு ஈடு செய்யும் வகையில் மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவுக்கு சில மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசிகள் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.