முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகள் நேற்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளே இவ்வாறுதனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு 11 மணி முதல் குறித்த பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளனஎன்றும் இராணுவத் தளபதி மேலும் கூறினார். முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் நிகழ்வை இன்று நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நேற்று இரத்துச் செய்துள்ள நிலையில், குறித்த இடமும் இராணுவத் தளபதியின்
அறிவிப்புக்கு அமைய நேற்றிரவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனத் தமிழ் சிவில் சமூகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
எனினும், புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் நேற்று ஒரே நாளில் 260 இற்கும் மேற்பட்டோர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம்
காணப்பட்டதையடுத்தே மேற்படி மூன்று பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
——————-
Reported by : Sisil.L